பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பனுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!!

பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி, பின்னர் தன்னுயிர் நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த திரு.சேமலையப்பன் (வயது 49) என்பவர் நேற்று (24.07.2024) மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை – திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே வந்துகொண்டிருந்தபோது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக தான் ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்தி பின்னர் உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும் தன் பொறுப்பிலிருந்த பள்ளிக் குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர் தனது இன்னுயிரை இழந்த திரு. சேமலையப்பன் அவர்களின் கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் நாம் தலைவணங்கி போற்றுகிறோம்.

காலம் சென்ற பள்ளி வாகன ஓட்டுநர் திரு. சேமலையப்பன் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த திரு. சேமலையப்பன் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஐந்து இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *