நிரம்பிய கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு !!

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் , ஒகேனக்கலில் வினாடிக்கு 62,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து , கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.எஸ்.ஆர் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபிணி அணை இரண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஆகையால் இரு அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை குறைந்ததால், தண்ணீர் திறப்பும் குறைந்து, நீர் வரத்தும் குறைந்தது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் கே.எஸ்.ஆர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனையொட்டி 2வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியது.

கே.எஸ்.ஆர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 70,098 கன அடியாக உள்ளது. இதேபோல் கபிணி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,965 கனடியாக உள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி 2 அணைகளில் இருந்து 1,16,900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 91 அடியை நெருங்கியது.

இதனால் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நதி அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றின் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

இதேபோல் தண்ணீர் திறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 62,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கலில் 11வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *