திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மாநகராட்சி மேயர் (திமுக) இளமதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார். இதில் ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் 48 வார்டுகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் பாரதிய ஜனதா கட்சி மாமன்ற உறுப்பினர் தனபாலன், தனது பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முறையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் கணேசனும் தனது வார்டில் பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள அடைப்புகளை சரி செய்யக்கோரி சுகாதார பிரிவில் பலமுறை புகார் தெரிவித்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் டீசல் இல்லை, ஓட்டுநர் இல்லை என தட்டிக் கழித்து வருவதாக தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நாய்களின் தொல்லைகளும் மாடுகளின் தொல்லைகளும் அதிகரித்து வருவதாக அனைத்து கட்சி கவுன்சிலர்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து , இதனை விரைவில் சரி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவடைந்ததாக மேயர் இளமதி அறிவிக்கவே, கோபமடைந்த திமுக மாமன்ற உறுப்பினர் ஜானகிராமன் எனது வார்டில் குடிநீர் ஆதாரமாக உள்ள கோபால சமுத்திர குளத்திற்கு வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டி ஒரு வருடமாக இந்த சபையில் கோரிக்கை வைத்து வருகிறேன் ஆனால் மேயர் வேண்டுமென்றே எனது வார்டினை புறக்கணிக்கிறார் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் மேயர், துணை மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் திமுக உறுப்பினர் ஜானகிராமன் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் கூட்ட அறையினை விட்டு வெளியேறினர். இதனால் கொதிப்படைந்த ஜானகிராமன் தொடர்ந்து குரல் கொடுக்கவே அங்கிருந்த திமுக உறுப்பினர்கள் அவரை சமரசம் செய்து அழைத்து சென்றனர். இதன் காரணமாக இன்றைய மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே நெல்லை, கோவை, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் மேயருக்கு எதிராக புகார்கள் எழுந்த நிலையில், இரு மேயர்கள் சொந்த காரணம் என கூறி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நிலையில், திண்டுக்கல்லிலும் அதே நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் சிலர் கவுன்சிலர்கள்.