கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக அரசியல் வரலாற்றுல் தவிர்க்க முடியா தகைமைசால் தலைவராக விளங்கிய முத்தமிழறிஞர் கலைஞரின் 6வது நினைவு நாள் இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
காலை 7.00 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து இந்த அமைதிப் பேரணி தொடங்கியது. முன்னதாக ஓமந்தூரார் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு அவர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வாலாஜா சலை வழியாக , காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை சென்று இந்த பேரணியானது நிறைவு பெற்றது.
பின்னர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
கலைஞர் நினைவிடத்தில் மலர்களாலேயே அவரது உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையையும் காணொலி காட்சி வாயிலாக அவர் திறந்து வைத்தார்.
இந்த பேரணி, நினைவஞ்சலியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இணை பொதுச்செயலாளர் எம்.பி.,கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சேகர் பாபு, ஆ.ராசா எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., உள்ளிட்ட பல அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.