கலைஞரின் உருவம்பொறித்த ரூ.100 நாணயம் வெளியிடப்பட உள்ளதையொட்டி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், விழாவில் தொண்டர்கள் பங்கேற்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள மடலில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும்.
நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை என்றென்றும் நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்நாளும் நம் இல்லத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம்.
அரை நூற்றாண்டுகாலம் தி.மு.கழகத்தைக் கட்டிக்காத்து, பேரியக்கமாக வளரச் செய்த தலைவர் கலைஞருக்குக் கழகத்தின் சார்பில் தலைமைக் கழகம் தொடங்கிக் கிளைக் கழகங்கள் வரையிலும் கொண்டாட்டம்தான்!
ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல திட்டங்களால் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங்கள்தோறும் கொண்டாட்டங்கள். இன்னும் கலையுலகினர், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
வங்கக் கடற்கரையில் தன் அண்ணனின் அருகில், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில், அவரிடம் இரவலாக வாங்கிய இதயத்தை ஒப்படைத்து, ஓய்வெடுக்கும் ஓய்வறியாச் சூரியனாம் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்கு அருங்காட்சியகத்துடனான நினைவிடம் அலைகடலின் தாலாட்டும் இசையின் பின்னணியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் நூற்றாண்டு நூலகம், கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் எனத் தன் வாழ்நாளெல்லாம் தமிழ்மக்கள் பயன்பெறப் பாடுபட்ட தலைவரின் புகழ்போற்றும் வகையில் பயனுள்ள கட்டமைப்புகள் அவருடைய நூற்றாண்டில் உருவாகியுள்ளன. உருவாக்கப்பட்டும் வருகின்றன.
மாவட்டங்கள்தோறும் கழகத்தினர் நிறுவிய சிலைகள், அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் கலைஞர் கோட்டம், கழக அமைப்புகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரசியல் உலகம் இதுவரை காணாத பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் கலைஞரை அவருடைய உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தில் சுமந்து ஒவ்வொரு நாளும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்தியாவில் இன்னொரு தலைவருக்கு இந்த அளவில் நூற்றாண்டு விழாவினைத் தங்கள் குடும்ப விழா போலக் கொண்டாடியிருப்பார்களா என்கிற அளவிற்கு நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா எத்திசையும் புகழ் மணக்கக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் மாநில சுயாட்சியின் உரிமைக் குரலாகத் தொடர்ந்து முழங்கியவரும், இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவரும், பல குடியரசுத் தலைவர்களையும் – பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியவருமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஆகஸ்ட் 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிடவிருக்கிறார்.