பொள்ளாச்சி;
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமியும், அதிமுக சார்பில் கார்த்திகேயனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரீன் சரண்யாவிடம் அவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதிமுகவிற்கு மதியம் 12 முதல் ஒரு மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தார்.
அப்போது வெளியே காத்திருந்த அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் மகேந்திரன், உடுமலை ராதாகிருஷ்ணன், கிணத்துக்கடவு தாமோதரன், வால்பாறை அமுல் கந்தசாமி ஆகியோர் நேரமானதால் ஆவேசம் அடைந்தனர்.
தேர்தல் அலுவலகத்திற்குள் வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதால் உடனடியாக தங்களிடம் மனுக்களை பெற வேண்டும் என தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் முறையிட்டார்.
அப்போது உளவு பிரிவு போலீஸார் அவரை தடுத்ததால் ஆவேசமான அவர், ”யாரப்பா நீ? ஏன் தடுக்குறீங்க?” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரது மனுக்களையும் தேர்தல் அதிகாரி பெற்றுக் கொண்டார்.
ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.