உயரமான தூண்கள் மற்றும் கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நடராஜர் ஆலயம்!!

நான்காவது பிரகாரத்தை அடுத்து கோவிலின் நடுநாயகமாக வீற்றிருக்கும் மூன்றாவது பிரகாரத்திற்குள் இறங்குவதற்கு கிழக்கும் மேற்கும் வாசல்கள் உள்ளன.

இந்தப்படிகளின்வழி இறங்கி மூன்றாவது பிரகாரத்தில் நாம் நுழையும்போதே கருங்கல் அமைப்புகளின் பிரம்மாண்டம் மற்றும் இருள் கவிந்த பாதாளத்தின் குளிர்ச்சியோடு கோவில் நம்மை உள்வாங்கி கொள்கிறது.

உயரமான தூண்கள் மற்றும் கருங்கல் சிற்ப அமைப்புகளோடு காட்சியளிக்கும் மூன்றாவது பிரகாரத்திலிருந்து அடுத்த இரண்டாவது பிரகாரத்திற்குள் நுழைய கிழக்குத்திசையில் ஒரு வாசல் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பிரகாரத்தில் தேர்போன்ற சன்னதி, தங்கவிமானம் மற்றும் திறந்தவெளி சுற்றுப்பிரகாரம் போன்றவற்றை காணலாம். மேலும் முதல் பிரகாரமான கருவறை இங்குதான் வீற்றிருக்கிறது.

இதுவே சித்சபை என்றழைக்கப்படுகிறது. இதற்கு எதிரே கனகசபை மற்றும் நிருத்யசபை ஆகியவை அமைந்துள்ளன.

இது தவிர மூன்றாவது பிரகாரத்தில்தேவ சபையும், நான்காவது பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ராஜ சபையும் ஆக ஐந்து சபைகள் நடராஜர் கோவிலின் முக்கிய அங்கங்களாக விளங்குகின்றன.

நடராஜர் கோவிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது.

ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது.

இதன் மூலம் ‘பொன்வேய்ந்த சோழன்’ எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

கோவிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது.

கோவிலின் வடக்கு கோபுர வாயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோவில் ஒரு தனியான கோவில் வளாகமாக கலைநயம் மிக்க கற்சிற்ப அலங்கார நுணுக்கங்களோடு அமைந்துள்ளது.

சிவராத்திரியின்போது நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

இது தவிர மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி திருமஞ்சனம் போன்ற விழாக்காலங்களில் தேர்த்திருவிழா மற்றும் தரிசனம் போன்ற விமரிசையான சடங்குகள் இக்கோவிலில் கொண்டாடப்படுகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *