சென்னை:
தவெக தலைவர் விஜய் அரசியல் எதிரி என திமுக-வையும், கொள்கை எதிரி என பாஜக-வையும் வசைபாடிக் கொண்டே, இடையில் இருக்கும் அதிமுக-வின் அஸ்திவாரத்தையும் சந்தடி இல்லாமல் அசைத்துக் கொண்டிருக்கிறார்.
கடைசி நேரத்தில் மனம் மாறி விஜய் தங்கள் பக்கம் வரலாம் என்ற நம்பிக்கையில் அதிமுக இன்னமும் விஜய்யை விமர்சிக்காமல் விட்டு வைத்திருக்கிறது. ஆனால், ‘நானே முதல்வர்’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்ட விஜய், அதிமுக-வை தாக்கவில்லை என்றாலும் அந்தக் கட்சியின் கட்டுமானத்தில் இருக்கும் செங்கல்களை செங்கோட்டையன் மூலமாக உருவும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.
நேற்று பெருந்துறை மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் விஜய் பேசுகையில், ‘‘அண்ணா, எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அவர்கள் தமிழகத்தின் சொத்து.
அண்ணன் செங்கோட்டையன் நம்மோடு வந்து சேர்ந்தது நமக்கு பெரிய பலம். அவரை போல் இன்னும் நிறைய பேர் வந்துசேர இருக்கிறார்கள். அவர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுப்போம்” என்றார்.
“எங்கள் கூட்டணிக்கு வருபவர்களுக்கு அதிகாரத்தில் பங்குகொடுபோம்” என ஆரம்பமே தமிழக அரசியலை அதிரவிட்ட விஜய், இப்போது மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய தலைகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை தீவிரப்படுத்தி இருக்கிறார்.
இதில், அதிமுக தலைகள் பலருக்கு செங்கோட்டையன் வலை விரித்தி ருப்பதும் அதை ஊக்குவிக்கும் விதமாக பெருந்துறையில் விஜய் பேசி இருப்பதும் அதிமுக-வினரை ஆத்திரமூட்டி இருக்கிறது.
விஜய்க்கு அதிமுக தலைவர்கள் இன்னும் ஏன் பதிலடி கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம்.
“தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறும்நிகழ்வு அதிமுக-வில் எழுச்சியுடன் நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கட்சியை பெருமைப்படுத்துவதற்காக சில கருத்துகளைச் சொல்வார்கள். தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக அவர்கள் அப்படிச் சொல்வார்கள்.
அப்படித்தான் செங்கோட்டையனும் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால், இதுவரை யாராவது அங்கு போய் சேர்ந்தார்களா? அவரை நம்பி யாரும் செல்லவில்லை. இனிமேலும் சேரமாட்டார்கள்.
பாதை தவறிச் சென்றவர்களால் சரியான அரசியல் பாதையை அமைத்துக் கொடுக்க முடியாது; காட்டவும் முடியாது என்பதை அதிமுக-வினரும் அரசியல் வரலாறு தெரிந்தவர்களும் நன்கு அறிவார்கள்.
ஆரம்பத்தில், தொண்டர்களை நம்பி கட்சி தொடங்கியவர்கள் இப்போது மாற்றுக் கட்சி தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள் என்றால், கரூர் சம்பவத்திற்கு முந்தைய அவரது பேச்சுக்கும் அதன் பிறகான அவரது நிலைப்பாட்டிலும் நிறைய மாறுபாடு ஏற்பட்டுள்ளது” என்றார்.