சென்னை:
தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள ஆர்எம்எஸ் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், மெயில் தினம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மண்டல விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
ஆர்எம்எஸ் முதுநிலை கண்காணிப்பாளர் எஸ்.பாக்கியலஷ்மி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடுவட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று, சிறப்பாகப் பணிபுரிந்த 78 ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மிகப்பெரிய ஆர்எம்எஸ் பிரிவாக, இந்த ஆர்எம்எஸ் பிரிவு திகழ்கிறது. இந்திய அஞ்சல்துறைக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், மத்திய தகவல் தொடர்பு துறை புதிய அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா பதவி ஏற்றுள்ளார்.
நமது துறையின் அனைத்துப் பிரிவுகளையும் நன்கு அறிந்தவர். இதனால், மெயில், பார்சல் மற்றும்வருவாய் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அஞ்சல்துறையின் வளர்ச்சிக்கு அவர் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளார்.
பார்சல் சேவையை மேம்படுத்த கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு மேற்கொள்ளப்படும் பார்சல் சேவையை அறிந்துகொண்டு, அதை இங்குசெயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பார்சல் மற்றும் மெயில் சேவையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த இயலும். அதற்கேற்ப வருவாயும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி அஞ்சல்துறை தலைவர் (வர்த்தக மேம்பாடு) பி.நீரஜ், உதவி அஞ்சல் துறைதலைவர் (மெயில்) வி.குமாரகிருஷ்ணன், அண்ணாசாலை வர்த்தக அஞ்சல் மையத்தின் அதிகாரி (பொறுப்பு) பி.வெற்றிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், ஏர்மெயில் பிரிப்புமண்டல அலுவலகம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.