கோவை:
தெற்கு ரயில்வே சேலம் கோட்டம், தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோவை ரயில் நிலையத்தில் பேரிடர்கால ஒத்திகை பயிற்சி இன்று நடந்தது.
கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் கலந்து கொண்டு ஒத்திகைப் பயிற்சியை பார்வையிட்டார்.
பேரிடர் காலங்களில் நடக்கும் விபத்துகளை எதிர்கொள்ள மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட இப்பயிற்சி, அவசரகால சூழ்நிலையில் முதல் ஒரு மணி நேரத்துக்குள் உயிர்களைக் காப்பாற்றும் ‘கோல்டன் ஹவர்” என்ற கருத்தை மையமாக கொண்டிருந்தது.
ஒத்திகை பயிற்சியில், ரயில் விபத்தில் 28 பயணிகள் மற்றும் இரண்டு ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டு, பின் பேரிடர்கால அவசரநிலை குறித்து கோவை ரயில் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மஞ்சள் குறியீடு அறிவிக்கப்பட்டு மருத்துவமனையின் 5 வகை அவசர நிலை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
பேரிடர் காலங்களில் பெருமளவு காயமடைந்தவர்களை கையாள்வது மற்றும் விரைந்து திறம்பட நோயாளிகளை வகைப்படுத்தும் செயல்முறை பற்றி மருத்துவ பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கான பயிற்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.