சென்னை:
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் மாணவ, மாணவிகள் விடுதிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை அதிகரிக்க, சிறப்பு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. 8,800 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.265 கோடியில் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர், நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சுய உதவிக்குழு பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், திமுக அரசில் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்று சந்தேகம் எழும் அளவுக்கு, எந்தப் பணியுமே நடைபெறவில்லை.
தொல்குடி திட்டத்தில் முறைகேடு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேலாண்மை கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு என விதிமுறைப்படி நியமிக்காமல், நேரடியாக நியமனம் செய்து, அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் வழங்கி வருகின்றனர்.
பழங்குடியினர் நலத் துறையில் ‘தொல்குடி’ திட்டத்தின்கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆதிதிராவிடர்களின் சம்பந்தி என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கடி கூறுவார்.
சென்றடையவில்லை ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் முழுமையாக அவர்களை சென்றடையவில்லை. இதற்காக திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனியாவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.