சென்னை:
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க தற்காலிக பொறுப்பாளர்களை நியமனம் செய்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற கிராமத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.
மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடியில் கொடி கம்பம் அமைக்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
கட்சி மாநில மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்களை அமைத்து, அதற்கான தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து நேற்று முன்தினம் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும், தொகுதி வாரியாக மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க தற்காலிக பொறுப்பாளர்களை நியமனம் செய்து நேற்று அவர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 7 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் 2 இடங்களில் பெண்களை பொறுப்பாளர்களாக நியமித்து, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சட்டப்பேரவை தொகுதிவாரியாக மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க 234 தொகுதிகளுக்கு மொத்தம் 1,638 தற்காலிக பொறுப்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் நியமித்துள்ளது.
இவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில அணித் தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதல்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பொறுப்பாளர்களுடன் கட்சியினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.