சென்னை:
பட்டியலின ஊராட்சித் தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சந்திக்க மறுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவதற்காக சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரை சந்திப்பதற்காக நாகை பிரதாபராமபுரம் ஊராட்சித் தலைவர் சிவராசு, கடலூர் சி.முட்லூர் ஊராட்சித் தலைவர் வேதநாயகி, திருச்சி கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் ரம்யா, கோவை கெம்மரம்பாளையம் ஊராட்சித் தலைவர் செல்வி நிர்மலா ஆகியோர் வந்துள்ளனர்.
அவர்கள் நாள் முழுவதும் காத்திருந்தபோதிலும், இயக்குநரை சந்திக்காமல் திருப்பி அனுப்பியதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியும், அவமதிப்பும் கண்டிக்கத்தக்கவை.
பட்டியலினத்தைச் சேர்ந்த இந்த ஊராட்சித் தலைவர்கள் தங்களின் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல முறை மனு அளித்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரை சந்தித்து முறையிட்டாலாவது விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர்களை துறை இயக்குநர் சந்தித்திருக்க வேண்டும்.
ஆனால், காலை முதல் மாலை வரை காத்திருந்தும் கூட, சந்திக்க முடியாது என்று கூறி இயக்குநரின் நேர்முக உதவியாளரும், அலுவலக உதவியாளரும் விரட்டியடித்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய அதிகாரிகள் தங்களை சந்திக்க முடியாத உயரத்தில் நிலை நிறுத்திக் கொண்டால் எவ்வாறு சமூகநீதி கிடைக்கும்.
எனவே பட்டியலின ஊராட்சித் தலைவர்களை துறை இயக்குநர் சந்திக்க மறுத்தது குறித்து விசாரிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின ஊராட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.