திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள 169 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோலடி ஏரி, ஆக்கிரமிப்பு காரணமாக 112 ஏக்கராக குறைந்துள்ளது. தொடர்ந்து ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில், கோலடி ஏரியை ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்ற முடிவு செய்த வருவாய்த் துறை அதிகாரிகள், முதல் கட்டமாக கடந்த 2 நாட்களில் போலீஸ் பாதுகாப்புடன் அன்பு நகர், செந்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்டு வந்த வீடுகள் மற்றும் ஆள் இல்லாமல் உள்ள வீடுகள் என, 33 வீடுகளை அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நேற்று முன்தினம் அம்பத்தூர் -திருவேற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்திய வருவாய்த் துறையினர், `ஏரியை ஆக்கிரமித்துள்ள புதிய வீடுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. மற்ற ஆக்கிரமிப்புகள், கணக்கீடு செய்யப்பட்டு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு அகற்றப்படும்’ எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கோலடி பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளிமாணவ-மாணவியர் நேற்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், ’’கோலடி ஏரி பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் வசிக்கும் வீடுகளை அகற்றக்கூடாது.
திடீரென வீடுகளை அகற்றினால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதுடன், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். ஆகவே, வீடுகளை அகற்றும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழைய முயன்றதால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு, போலீஸாரின் அனுமதியுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள், ஆட்சியரிடம் தங்களின் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வீடுகள் கணக்கெடுக்கும் பணி: ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் போராட்டம் நடத்திய நிலையிலும், நேற்று ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள் உள்ளிட்டோர் அடங்கிய வருவாய்த் துறையினர் 100 பேர், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுத்தனர்.
இப்பணியில், நேற்று மட்டும் சுமார் 1,300 ஆக்கிரமிப்பு வீடுகளை கண்டறிந்துள்ளனர். கணக்கெடுப்பு தொடரும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.