திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாள் தோறும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன – தினகரன் குற்றச்சாட்டு!!

மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைதள பக்கத்தில், தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் முறையான மும்முனை மின்சாரமின்றி கருகும் நெற்பயிர்கள், சீரான மின்விநியோகமின்றி தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் என திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாள்தோறும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன.

கோடைகாலத்தில் பொதுமக்கள் தொடங்கி தொழிற்சாலைகள் வரையிலான மின்நுகர்வுகளின் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தெரிந்திருந்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை என்பதை அடிக்கடி அரங்கேறும் மின்வெட்டுகளே அம்பலப்படுத்துகின்றன.

ஆட்சிக்கு வந்தபின்பு மின் கட்டணத்தை உயர்த்துவதில் குறிக்கோளாய் இருந்து அதனை செயல்படுத்திய திமுக அரசு, பொதுமக்களை பாதிக்கும் மின்வெட்டைப் போக்கவோ, மின்சார உற்பத்தியை அதிகரிக்கவோ எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. இதன் மூலம், 2006 -11 காலகட்டத்தில் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்னையால் ஆட்சியை பறிகொடுத்த திமுக, அதிலிருந்து இன்னமும் பாடம் கற்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

எனவே, பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரின் அன்றாட, அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்குவதை உறுதி செய்வதோடு, மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து, மாநிலத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *