தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் – உதயநிதி….

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்காக புத்தாடைகள் எடுப்பது, பட்டாசுகள் வாங்குவது என பொதுமக்கள் ஆர்வமுடன் இயங்கி வருகின்றன.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சுமார் 14,000 சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்க உள்ளது.

ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகையின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

ஆனால், திமுக சார்பில் இதுவரை தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லப்பட்டது இல்லை. இதனால் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

அதே சமயம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்சித் தலைவராக இல்லாமல் முதல்வராக மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், அரசுத் தரப்பில் இருந்து எந்த பதிலும் வந்ததில்லை.

இந்த நிலையில் திமுகவில் முதல் முறையாக தீபாவளி பண்டிகைக்காக மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இறுதியாக, “திராவிடம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆளுநருக்கு அலர்ஜியாகிவிடும்.

கலைஞரின் உயிரினும் மேலான கழக உடன் பிறப்புகள் இருக்கும் வரை தமிழகத்தையும் திராவிடத்தையும் எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், “நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அனைவருக்கும் திமுக பவள விழா ஆண்டு வாழ்த்துகள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கொண்டாடுபவர்களுக்கு தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

திமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இதுவரை தீபாவளி வாழ்த்துகள் கூறாத நிலையில், வருங்கால திமுக தலைமை என வர்ணிக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் தீப ஒளி திருநாள் வாழ்த்து கூறியுள்ளது அரசியல் அரங்கில் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *