நாம் எல்லோரும் உடன்பிறப்புகள் என்ற பாச உணர்வுடன் தமிழகத்தை தலைநிமிர செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!!

சென்னை:
நாம் எல்லோரும் உடன்பிறப்புகள் என்ற பாச உணர்வோடு, தமிழகத்தைத் தொடர்ந்து தலைநிமிரச் செய்வோம் என திமுக இளைஞரணி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி சார்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

போட்டி நிறைவு பெற்ற நிலையில், அதற்கான பரிசளிப்பு விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். முன்னதாக அவர் பரிசு பெற்றவர்களுடன் அண்ணா அறிவாலயம் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: இந்தப் பேச்சுபோட்டி, மூன்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற போட்டிமட்டுமல்ல, திமுகவின் கருத்தியலை, அடுத்த நூற்றாண்டுக்குச் சுமந்து செல்லவிருக்கும் பேச்சுப் போராளிகளைக் கண்டறிந்து பட்டை தீட்டும் பயிற்சிப் பட்டறையாகும்.

கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு 100 பேச்சாளர்களை அடையாளம் காண இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், 182 பேச்சாளர்களை அடையாளம் கண்டிருக்கிறார் உதயநிதி. வெற்றி பெற்றுள்ள மோகநிதி, சிவரஞ்சனி, வியானி விஷ்வா ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.

மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் இனி உங்கள் மாவட்டங்களில் நடைபெறும் அனைத்துப்பொதுக்கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் இங்குள்ள 182 பேச்சாளர்களை நீங்கள் பயன்படுத்தியே ஆக வேண்டும்.

இங்கிருப்பவர்கள் பேச்சாளர்கள் மட்டும் அல்ல; இவர்கள்தான் திராவிட இயக்கத்தின் எதிர்காலத் தலைமுறை. 1971-ம் ஆண்டு 18-வது வயதில் கோவை மாநாட்டில் கல்லூரி மாணவனாகக் கலந்து கொண்டு பேசினேன்.

மேலும் சொல்ல நினைக்கும் கருத்துகளை தெளிவாக, இனிமையாக, புரியும்படிப் பேச வேண்டும். நவீன யுகத்தின் புதிய பேச்சுப் போராளிகளான உங்களை வரேவற்கிறேன்.

திராவிட இயக்கம் இளைஞர்களால், இளைஞர்களுக்காக தொடங்கப்பட்ட இளைஞர் இயக்கம்.

இங்கு கொள்கை வீரர்களாக வாருங்கள். நாம் எல்லோரும் உடன்பிறப்புகள் என்ற பாச உணர்வோடு, தமிழகத்தைத் தொடர்ந்து தலைநிமிரச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *