திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!!

சென்னை:
திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.28) நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவது, சமூக வலைதளத்தை கண்காணிப்பது, தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், பூத் கமிட்டிகளுக்கான பணிகள், பாக முகவர்களுடன் தொடர்பிலிருந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்தல், தொகுதி பிரச்சினைகள், நலத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளைச் சென்றடைந்துள்ளதா, மக்களின் கோரிக்கைகள், மேலும் கட்சி ரீதியாக தொகுதி பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தொகுதி பார்வையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கயிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, துணை முதல்வர் உதயநிதி தலைமையில், தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *