செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ரூ.42.70 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிறுத்தத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.12.2024) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் 42.70 கோடி ரூபாய் செலவில் ஆம்னி 1. பேருந்துகளுக்கான நிறுத்துமிடம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் 15 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு காலநிலைப் பூங்கா மற்றும் சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையம், என மொத்தம் 58 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 3 முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா. மோ. அன்பரசன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம் இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி. காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவர் திருமதி ப்ரித்தா ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.