ஜம்மு-காஷ்மீர் என்கவுன்ட்டரில் உயிரிழந்த ராணுவ அதிகாரி ராகேஷ் குமாரின் உடலுக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்திய இமாச்சல் மக்கள் !!

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி ராகேஷ் குமார் உயிரிழந்தார்.

இவரது உடல் அவரது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள பரோங் கிராமத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது.

ஜெய் ஹிந்த் என உணர்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பியதுடன் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ராகேஷ் குமாரின் உடலுக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினர்.

மழையால் சேதமடைந்த வீட்டை மீண்டும் கட்ட வேண்டும் என்பது ராகேஷ் குமாரின் கனவாக இருந்தது. ஆனால், அதற்குள் தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டரில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகேஷ் குமாரின் சகோதரர் கரம் சிங் கூறுகையில், “ கடந்த ஆண்டு பெய்த பருவமழையின்போது பத்து அறைகள் கொண்ட எங்களின் பூர்வீக வீடு கடும் சேதமடைந்தது.

அதையடுத்து, தற்போது நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். ஒன்றரை மாதத்துக்கு முன்பு விடுமுறையில் வந்த ராகேஷ் புதிய வீட்டின் கட்டுமானத்தை ஜனவரியில் தொடங்கலாம் என உறுதியளித்துச் சென்றார். அதற்குள் விதி விளையாடிவிட்டது” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

என்கவுன்ட்டரில் உயிரிழந்த ராணுவ ஜூனியர் கமிஷன்ட் ஆபிசர் நயிப் சுபேதர் ராகேஷ் குமார், அவரது மனைவி பானுப்பிரியா, மகள் யாஷ்வினி (13), மகன் பிரணவ் (7) மற்றும் அவரது 90 வயது தாயார் பதி தேவி ஆகியோருடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *