”கோடி பக்தர்கள் தேடிவரும் சபரிமலை பற்றிய முக்கிய விபரங்கள்”

சாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் பக்தர்கள் மத்தியில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள்.

சபரிமலையில் ஜாதி பேதமின்றி பக்தர்கள் அய்யப்ப சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவதும் அய்யப்பனின் திருநாமத்தில் பக்தர்கள் அழைக்கப்படுவதும் இக்கோவிலுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு.

மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது என்பது போல சிறு கோவிலாக காட்சி தரும் சபரிமலை அய்யப்பன் சன்னதி பக்தர்களின் மனக்கோவிலில் பெரும் இடத்தைப் பிடித்து விட்டது. 1978ம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைகளில் சுமார் 60 லட்சம் பக்தர்கள் மட்டுமே வருகை புரிந்து உள்ளனர்.

ஆனால் தற்போது 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

பக்தர்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் சன்னிதானத்திற்கும் மாளிகைபுரத்திற்கும் ஒருவழிப்பாதை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு மருத்துவ குணம் கொண்ட மூலிகை கலந்த தண்ணீர் ஆங்காங்கே வழங்கப்படுகிறது.

இதற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை தண்ணீர் பந்தல்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டும், மேலும் மலை ஏறும் போது மூச்சு திணறலுக்கு ஆளாகும் பக்தர்களுக்கு ஆக்ஸிஜன் மூலம் மூச்சு திணறல் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

சபரிமலையில் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் துப்புரவு பணியில் தினமும் ஏராளமான ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

சீசன் காலங்களில் 300 ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

சீசன் காலங்களில் சபரிமலை, எருமேலி, பம்பை ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

சபரிமலையில் மதியம் அன்னதானம் (சாப்பாடு) வழங்கப்படுகிறது. இதில் 3 வகையான கூட்டு மற்றும் குழம்பு வழங்கப்படும்.

எருமேலியில் பகல் கஞ்சி வழங்கப்படும். இதில் இஞ்சி, சுக்கு உள்பட மருந்துகள் சேர்த்து சமைக்கப்படுகிறது.

பம்பையில் ரூ.12 கோடி செலவில் ஸ்ரீ அய்யப்பா மெடிக்கல் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆம்புலன்ஸ் வசதி ரூ.50 லட்சம் செலவில் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை வரும் பக்தர்கள் விரதம் இருந்து ஈருமுடிக்கட்டுக் கட்டி வரவேண்டும்.

சபரிமலை 60 கி.மீ. சுற்றளவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. பத்தினம்திட்டையில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் 4 கி.மீ. தூரத்தில் மலை மீது அமைந்துள்ளது.

சபரிமலையின் உயரம் 4 ஆயிரம் அடியாகும். சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

இங்கு அய்யப்ப சுவாமியின் நண்பராக விளங்கிய வாபருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த வாபரை இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் வணங்கிச் செல்கிறார்கள்.

சபரிமலைக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடநாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அதுமட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் இருமுடிக்கட்டு கட்டி சபரிமலை வருகிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *