வரும் கோடைக்காலத்தில் சீரான மின்விநியோகம் செய்வதற்காக சென்னை மண்டலத்தில் 9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!!

சென்னை:
வரும் கோடைக்காலத்தில் சீரான மின்விநியோகம் செய்வதற்காக, சென்னை மண்டலத்தில் 9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல அனைத்து பொறியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின்பகிர்மான மண்டலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், எதிர்வரும் கோடைகால மின் பளுவை எதிர்கொள்வதற்கு இம்மண்ட லங்களில் எடுக்கப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி விரிவான ஆய்வை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில், 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு பிரிவு அலுவலரிடமும் அதற்கான காரணத்தை கேட்டறிந்த அமைச்சர், தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்வதற்கு உத்தரவிட்டார்.

மேலும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும்போது பில்லர் பெட்டிகள் பழுதடைவதை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் இதுவரை 6,024 பில்லர் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 503 பில்லர் பெட்டிகளை உயர்த்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, இம்மாத இறுதிக்குள் முடித்துவிடுமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

வரும் கோடைகால மின் பளுவை எதிர்கொள்ளும் விதமாக, சென்னை மண்டலத்தில் மாதவரம் ரேடியன்ஸ், மகாகவி பாரதியார் நகர், பருத்திப்பட்டு, சதர்ன் அவென்யூ, சோழவரம், புதுப்பேட்டை, முண்டக்கன்னியம்மன் கோவில், டேவிட்சன் தெரு, கணேஷ் நகர் ஆகிய 9 இடங்களில் ரூ.176 கோடி மதிப்பீட்டில் 33/11 கிலோ வோலட் துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, காஞ்சிபுரம் மண்டலத்தில் விமான ஆணைய ஊழியர் குடியிப்பு, மாங்காடு ஆல்டிஸ், அரசன்கழனி மற்றும் குறிஞ்சி நகர் ஆகிய 4 இடங்களில் ரூ.96.20 கோடி மதிப்பீட்டில் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் தற்போது துணைமின் நிலையங்களில் இயக்கத்தில் உள்ள 16 மின் மாற்றிகள் மற்றும் காஞ்சிபுரம் மண்டலத்தில் 5 மின் மாற்றிகளின் திறனை தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மின்வாரிய தலைவர் க.நந்தகுமார், இயக்குநர் (பகிர்மானம்) அ.ரா.மாஸ்கர்னஸ் மற்றும் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *