தன்னை அறியாமல் பாகனை தாக்கியதை அறிந்த தெய்வானை யானை குழந்தை போல் கண் கலங்கிய காட்சிகளும் தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது!!

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் 26 வயது தெய்வானை யானை உள்ளது. இந்த கோவில் யானையை பராமரிக்க பாகன்களாக அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 46), ராதாகிருஷ்ணன் (57), செந்தில்குமார் (47) ஆகிய 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று மாலை யானை பராமரிப்பு பணியில் பாகன் உதயகுமார் மட்டும் இருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பலுகல் பகுதியை சேர்ந்த சிசுபாலன் (59) வந்துள்ளார்.

நேற்று மாலை யானை அருகே சென்றபோது சிசு பாலனை யானை தாக்கியது. அப்போது அதனை பார்த்த பாகன் உதயகுமார் அதனை தடுக்க சென்றபோது அவரையும் யானை தாக்கியதில் 2 பேரும் பலியாகினர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். இதற்கிடையே சக பாகன்கள் யானையை சாந்தப்படுத்தி கூடுதல் சங்கிலிகள் கொண்டு அதனை கட்டி போட்டனர். சிசுபாலன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் வங்கியில் பணி யாற்றி வருகிறார்.

இவரது தந்தை திருச்செந்தூரில் யானை பாகனாக இருந்ததால் சிறு வயது முதலே சிசுபாலன் யானைகளை பார்க்க வருவது வழக்கமாகும்.தெய்வானை யானை தங்குவதற்கு ராஜகோபுரம் பகுதியில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று அந்த குடிலின் பின் வாசல் வழியாக சிசுபாலன் சென்றுள்ளார். அப்போது அவர் யானையின் துதிக்கையில் முத்தம் கொடுத்தும், யானையின் முன்னால் நின்று தனது செல்போனில் ‘செல்பி’யும் எடுத்துள்ளார்.

இதற்கிடையே ஏற்கனவே அந்த யானையிடம் சிசுபாலன் விளையாட்டுத் தனமாக நடந்து கொண்டதாகவும், இதனால் அவர் மீது யானை கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அவர் நீண்ட நேரம் ‘செல்பி’ எடுத்ததால் ஆத்திரம் அடைந்த யானை அவரை துதிக்கை யால் சுற்றி வளைத்து தாக்கி யது. இதனை யானையின் பின்னால் நின்ற உதயகுமார் பார்த்து அதிர்ச்சியடைந்து சிசுபாலனை மீட்க சென்றுள்ளார்.

அப்போது பின்னால் இருந்து வேறு யாரோ வருகிறார்கள் என நினைத்து துதிக்கையால் அவரையும் தாக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாகனும், சிசுபாலனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னால் வந்த நபர் பாகன் உதயகுமார் என்பது தெரிந்ததும் பாகனை தாக்கி விட்டோமே என்று நினைத்து யானை வருந்தியது.

சி.சி.டி.வி.காட்சிகள்

எப்போதும் யானை பாகன் மீது மிகுந்த பாசத்தில் இருந்து வருமாம். இந்நிலையில் கோபம் தணிந்ததும் பாகனை தாக்கியதை அறிந்த யானை குழந்தைபோல் கண்ணீர் விட்டு தன்னை கட்டிப்போட்ட இடத்தில் இருந்து மண்டியிட்டு உதயக்குமாரை துதிக்கையால் தூக்கியவாறு அவரை எழுப்ப முயன்றது.

பலமுறை இவ்வாறாக செய்தும் பாகன் எழுந்திருக்காததால் யானை கண்ணீர் விட்டபடி சோகத்தில் மூழ்கியது. அப்போது யானையை சாந்த படுத்திய சக பாகன்களை பார்த்து தெய்வானை யானை கண் கலங்கி நின்றது. இந்த காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.

பாகன் உதயகுமார் தெய்வானை யானையுடன் மிகவும் அன்பாக பழகி வந்துள்ளார். சிறு வயது முதலே யானை அவருடன் வளர்ந்ததால் எப்போதும் அது அன்யோன்யமாக நடந்து கொள்ளும். தினமும் நடைபயிற்சியின் போதும், பக்தர்களுக்கு ஆசி வழங்கும்போதும் உதயக்குமாருடன் யானை விளையாடி கொண்டி ருக்கும்.

தொட்டியில் குளிக்கும்போதும், முகாம்களுக்கு சென்றி ருக்கும்போதும் யானை உதயக்குமாருடன் நெருங்கி பழகி விளையாடுமாம்.

பாகனை தாக்கிய வருத்தத்தில் யானை சோகமாக இருந்ததுடன் இரவு வரை சாப்பிடாமல் இருந்தது. சம்பவம் நேற்று மாலை 3 மணி அளவில் நடந்த நிலையில் இரவு 10 மணி வரை யானை உணவருந்தவில்லை. அதற்கு பின்னர் பாகன்கள் முயற்சியால் சிறிதளவு பச்சை ஓலையை சாப்பிட்டது.

இதுகுறித்து திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கவின் கூறும்போது,சிசுபாலன் யானையின் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்தவாறு துதிக்கையில் முத்தமிட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது ஆத்திரத்தில் இருந்த யானை அவரை தாக்கி உள்ளது என்றார்.

தொடர்ந்து யானைக்கு மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், வனத்துறை மருத்துவர்கள் மனோகர், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து யானை குடிலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் தெய்வானை யானையை பராமரிப்பதற்காக நெல்லையப்பர் கோவில் யானை பாகன் ராமதாஸ் என்பவரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் யானை இதுவரை பாகன்களையோ, பக்தர்களையோ தாக்கிய சம்பவங்கள் நடைபெற்றது இல்லை. நேற்றும் அங்கு சென்ற பிற பாகன்களையோ மற்றவர்களையோ தாக்காத யானை சிசுபாலனை மட்டும் தாக்கியதன் காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கடைசியாக பாகன் உதயகுமார் தெய்வானை யானை மீது தண்ணீர் காட்டும் காட்சி களும், தன்னை அறியாமல் பாகனை தாக்கியதை அறிந்த தெய்வானை யானை குழந்தை போல் கண் கலங்கிய காட்சிகளும் தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அது பார்ப்பவர்கள் கண்களை கலங்க செய்யும் வகையில் உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *