”அத்துமீறிபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதிப்பதா”- டிடிவி தினகரன் கண்டனம்!!

அத்துமீறி பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படை, அவர்களின் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்வது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து தாங்க முடியாத அளவிற்கு அபராதம் விதிப்பது, அபராதம் செலுத்த தவறினால் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவது என இலங்கை அரசின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

இந்நிலையில், எல்லை தாண்டியதாக கூறி பறிமுதல் செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை அரசின் முடிவை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்துவதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கும் அதிகமான மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் படகுகளையும் முழுமையாக மீட்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *