விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாததின் விளைவு.. இந்த ஆண்டும் டெல்டாவில் 2,000 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தால் பாதிப்பு… முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை… அண்ணாமலை அறிக்கை..

சென்னை ;

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில், டெல்டா பகுதியில், சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகியிருக்கிறது. பாசனக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்தும், திமுக அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவு, இந்த ஆண்டும் டெல்டா பகுதி சம்பா பயிர்கள் சுமார் 2,000 ஏக்கர் அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, டெல்டா பகுதியில் நடைபெறும் விவசாயம்தான். ஆனால் அதனைக் குறித்துச் சிறிதும் கவலை இல்லாமல், சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டை, தாங்கள் கொடுப்பது போல விளம்பரம் செய்வதோடு தங்கள் பணி முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பாசனக் கால்வாய்களைத் தூர்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவது குறித்து அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. 

உடனடியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள பாசனக் கால்வாய்களை, முழுமையாகத் தூர்வாரும் பணிகளைப், போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *