கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்!!

மதுரை:
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் நிர்வாகி நிர்மல்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று தனித்தனியாக தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களில் கூறியிருப்பதாவது:

கரூரில் செப். 27-ல் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு முற்றிலும் எதிர்பாராதது, துரதிஷ்டவசமானது. கட்டுப்படுத்த முடியாத அளவில் கூட்டம் கூடியதாலும் போதுமான காவல்துறையினர் பணியமர்த்தப்படாமல் இருந்ததே நிகழ்வுக்கு காரணம்.

அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டதை விட அதிக அளவில் தொண்டர்கள் கூடியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டது.

தவெக தலைவர் மற்றும் நிர்வாகிகளால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பொதுக் கூட்டத்திற்கு வர வேண்டாம் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காவல்துறையினர் உரிய வழிமுறைகளை வகுக்க தவறிவிட்டனர்.

நாங்கள் குற்றமற்றவர்கள். அரசியல் காரணங்களுக்காக தவறான குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரம் இல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது. காவல்துறை தரப்பில் எங்களுக்கு எவ்விதமான எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை.

செப்.25 வரை கூட்டம் நடத்த காவல்துறை தரப்பில் சரியான இடம் ஒதுக்கவில்லை. கூட்டம் அதிகமானதும் சில சமூக விரோதிகள் கூட்டத்திற்குள் நுழைந்து விஜய் மீது காலணி எறிந்தனர்.

மாற்று வழி இருந்தும் பதிவு எண் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனத்தை கூட்டத்திற்குள் காவல்துறையினர் அனுமதித்தனர்.

முன்கூட்டியே திட்டமிட்டு குண்டர்கள் கூட்டத்திற்குள் நுழைந்து, ஆயுதங்களால் தாக்கினர்.

காவல்துறையும் தடியடி நடத்தியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மனுதாரர்கள் எவ்விதமான குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை நடைபெறும் விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *