”விஸ்வகர்மா” திட்டத்தில் அரசியல் விளையாட்டு வேண்டாம் – பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் எச்சரிக்கை!!

விஸ்வகர்மா திட்டத்தில் அரசியல் விளையாட்டு வேண்டாம் எனவும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், ஜாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும்.

எனவே, தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்த முடியாது. சமூக நீதி அடிப்படையில், தமிழகத்தில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது” என்று மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (27.11.2024) கடிதம் எழுதியுள்ளார்.

“தமிழக அரசு செயல்படுத்த இருக்கும் புதிய திட்டம், ஜாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும்” என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

பாரம்பரிய கைவினைஞர்கள், கைவினைத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 18 வகையான பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் இத்திட்டத்தால் பயன்பெறலாம்.

நாடெங்கும் கிராமங்கள், நகரங்களில் உள்ள கைவினைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். பல மாநிலங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு பல லட்சக்கணக்கான கைவினைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய பல்லாயிரம் கைவினைஞர்கள் பேரார்வத்துடன் இருக்கும் நிலையில், அதில் தனது அரசியல் விளையாட்டை திமுக நடத்துவது வேதனை அளிக்கிறது.

ஜாதி அடிப்படையான தொழில்முறையை ஊக்குவிக்குகிறது என முதலமைச்சர் காரணம் கூறியிருக்கிறார். இந்தியாவில் எந்தத் தொழிலையும், யார்

வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கான வாய்ப்புகளை மோடி அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்கள் தொழில்துறையில் நுழைய, சாதிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்த பின்னணியும் இல்லாமல், தொழில் துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு மோடி அரசின்

ஸ்டார்ட்அப் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. முத்ரா கடன் உதவி திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அளிக்கும் திட்டத்தையும் மோடி அரசு
செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் பல்வேறு கைவினைத் தொழில்கள் பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உதவி செய்யவே விஸ்வகர்மா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நான் செல்லும் இடங்களில் எல்லாம், கைவினைஞர்கள் என்னை சந்தித்து, விஸ்வகர்மா திட்டம், செயல்படுத்தப்படாதது பற்றி வேதனை தெரிவிக்கின்றனர்.

அதனால்தான் முதலமைச்சரை நேரில் சந்தித்தபோதும் அதை வலியுறுத்தினேன். எனவே, திமுகவின் அரசியல் ஆதாயங்களுக்காக, இத்திட்டத்தின் உன்னத நோக்கத்தை சிதைத்து விட வேண்டாம் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

ஜாதி அடிப்படையிலான தொழில்முறையை ஊக்குவிக்கும் திட்டம் என பேசும் முதலமைச்சர், திமுக தலைவர் பதவியை அனைவருக்கும் பொதுவாக எப்போது ஆக்குவார்? கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக அவரது மகன் மு.க.ஸ்டாலின் வந்ததும், இப்போது அவரது மகன் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் மகுடம் சூட்டப்பட்டிருப்பதும், தயாநிதி மாறன், கனிமொழி என ஒரே குடும்பத்தில் பலர் அதிகாரத்தில் இருப்பதும் எந்த வகையான முறை? திமுக கட்சியிலும், ஆட்சியிலும் பிறப்பின் அடிப்படையில் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்வதால், தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

குடும்பத்தில் இருந்து கூட ஆண் வாரிசை மட்டும், அடுத்தடுத்து அதிகாரத்திற்கு கொண்டு வருகிறார்களே தவிர, பெண் வாரிசுகளை, மொகலாய அரச குடும்பம் போல வீட்டுக்குள்ளேயே முடக்கி விடுகிறார்கள். அப்படியே வந்தாலும் அவர்களுக்கு தலைமைப் பதவி அளிக்கப்படுவதில்லை.

இப்படி சமத்துவத்தை, சமூக நீதியை புதைத்து விட்டு, விஸ்வகர்மா திட்டத்தை ஜாதி பெயரைச் சொல்லி மறுப்பது, தமிழ்நாட்டு கைவினைஞர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை மறுக்கும் செயல். எனவே, இதில் அரசியல் விளையாட்டுகளை தவிர்த்து விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *