சென்னை:
வளர்ப்பு நாய்களுக்கான கண்காட்சியில் 5 பரிசுகளை வென்ற, காவல் மோப்ப நாய் பிரிவுக்கு காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார்.
குற்ற வழக்குகளில் துப்புத்துலக்க, கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டறிதல், போதைப் பொருட்கள் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் காவல் துறையினருக்கு எளிதில் குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க மோப்ப நாய் படைப் பிரிவு உதவி வருகிறது. இதற்காக மோப்ப நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்கள் மயிலாப்பூரில் நடைபெற்ற வளர்ப்பு நாய்களுக்கான கண்காட்சியில் நாய்களுக்கான கீழ்ப்படிதல் மற்றும் திறமைகள் போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் மோப்ப நாய் படைப் பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய்கள் 5 பரிசுகளைப் பெற்று அசத்தின.
இதையடுத்து, கண்காட்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கு, பயிற்சி அளித்த உதவி ஆய்வாளர்கள் வேலு, நாராயணமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரம், தலைமைக் காவலர்கள் முருகன், செந்தில், முதல்நிலை காவலர்கள் பிரபா கரன், ஷாம்குமார் ஆகியோரை காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினார்.
மேலும், மோப்ப நாய்களை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தும் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் சக்தி கணேசன் உடனிருந்தார்.