சென்னை:
சென்னை மாநகராட்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் 22 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
120 சமையல் கூடங்களும், போதிய மளிகை மற்றும் காய்கறிகளுடன் தயாராக உள்ளன. மாநகராட்சியின் 36 படகுகள் உள்பட 103 படகுகள், தேவையான இடங்களில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.
100 குதிரைத்திறன் கொண்ட 134 ராட்சதமோட்டார்கள் உள்பட 1686 மோட் டார்கள், முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 466 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட மோட்டார்களும் தயாராக உள்ளன. 262 மர அறுவை இயந்திரங்கள், 9 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்களும் தயார் நிலை யில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பராமரித்து வரும் 835 பூங்காக்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் அனைத்தும் இன்று மூடப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘மழைநீர் தேங்குவதன் காரண மாக பரங்கிமலை, அரும்பாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களை பொதுமக்கள் இன்று (நவ.30) பயன்படுத்த வேண்டாம்.
அடுத்தடுத்த நாட்களில் வாகன நிறுத்தங்களை பயன்படுத்தலாமா என்பது குறித்து வானிலை நிலவரத்தை அறிந்து தகவல் தெரிவிக்கப் படும்’’ என கூறப்பட்டுள்ளது. வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று செயல்படாது என அறிவிக்கப் பட்டுள்ளது.