மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து கீழமாசி வீதி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வாகன பேரணி மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக, திமுக கட்சிகளின் ஊழல் காரணத்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை. தமிழ்நாட்டின் கவுரவத்தை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பறைசாற்றியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, திமுக என இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள். இதை மக்கள் புரிந்து கொள்ள துவங்கியுள்ளனர்.
பாஜகவை ஒரு வாய்ப்பாக மக்கள் பார்க்கிறார்கள். இங்கு நடைபெறும் ரோடு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்காகவும், அண்ணாமலைக்காகவும் வந்துள்ளனர்.
தமிழ்நாட்டை ஊழலின் மூலம் அதிமுகவும் , திமுகவும் மாறி மாறி சீரழித்து விட்டது. ஊழலில் இருந்து விடுபட தமிழ் பெருமையை தேசிய அளவில் கொண்டு செல்ல பிரதமர் மோடி வெற்றி பெற வேண்டும். தாமரை பட்டனை மக்கள் அழுத்த வேண்டும் என்றார்.