புதுச்சேரி:
“புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்பதால் பிரச்சினை இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், தேவைப்படுவோருக்கு உணவை அந்தந்த பகுதிக்கே சென்று தரவும்” என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் புயலின் தாக்கத்தால் மழை நன்கு பெய்து வருகிறது. காற்றின் வேகமும் சீராக உயர்ந்து வருகிறது. பல பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டது. அதை தொடர்ந்து மின்துறையினர் அதை சரி செய்து மின்விநியோகத்தை சீராக தந்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் நிலையை காரில் சென்று ஆய்வு செய்தார். கடற்கரைச்சாலை தலைமைச்செயலகம் அருகே அவர் ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனும் அப்பகுதியில் ஆய்வில் இருந்தார். காரில் சென்ற முதல்வரை பார்த்தவுடன் ஆட்சியர் அவரிடம் தற்போதைய நிலை தொடர்பாகவும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாகவும் விளக்கினார்.
ஆட்சியர் குலோத்துங்கன், “மதுராந்தகம்-புதுச்சேரி இடையை புயல் கரையை கடக்கும். புயல் மாலை 7 மணிக்கு மேல் கரையை கடக்கும் என்பதால் மழை இருக்கும். நிவாரண மையங்களில் இருந்த1,500 பேருக்கு உணவு விநியோகம் செய்துள்ளோம்.” என்றார்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி, “புயல் இரவுதான் கரையை கடக்கும். நமக்கு பிரச்சினை இல்லை. அதிக மழை தற்போது இல்லை. உணவு விநியோகத்தை உறுதி செய்யுங்கள். தேவைப்படுவோருக்கு அந்தந்த பகுதிக்கும் சென்று தர நடவடிக்கை எடுங்கள். உணவு தடையின்றி தாருங்கள். மழை நீர் தற்போது எங்கும் தேங்கவில்லை.” என்றார்.