கோவை:
கோவையில் நேற்று இரவு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து இன்று (டிச.2) காலை மாநகரின் பல்வேறு இடங்களில் மீண்டும் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் ‘ரெயின் கோட்’ அணிந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவையில் நேற்று (டிச.1) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்து இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகரில், மழைநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகத்தினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சுரங்கப் பாதைகளின் கீழ் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்ற மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், கோவையில் நேற்று மதியத்துக்கு பின்னரே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து நேற்று இரவு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. கணபதி, பீளமேடு, ஆவாரம்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் சில மணி நேரம் சாரல் மழை பெய்தது. அதன் பின்னர் மழை நின்றது.
தொடர்ந்து இன்று (டிச.2) காலை மாநகரின் பல்வேறு இடங்களில் மீண்டும் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் ‘ரெயின் கோட்’ அணிந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.
இதற்கிடையே, இன்று (டிச.2) காலை வெளியான அறிக்கையின் (டிச.1 காலை 8.30 மணி முதல் டிச.2 காலை 7.30 மணி) நிலவரப்படி, பீளமேடு விமான நிலையப் பகுதியில் 3.50 மி.மீ, வேளாண் பல்கலை.யில் 2.80 மி.மீ, பெரியநாயக்கன்பாளையத்தில் 7.40 மி.மீ, மேட்டுப்பாளையத்தில் 12 மி.மீ, பில்லூர் அணையில் 8 மி.மீ, அன்னூரில் 6.40 மி.மீ, கோவை தெற்கு தாலுகா பகுதியில் 2 மி.மீ, சூலூரில் 5.80 மி.மீ, வாரப்பட்டியில் 1 மி.மீ, சிறுவாணி அடிவாரம் மற்றும் மதுக்கரையில் தலா 1 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம், பொள்ளாச்சியில் தலா 2 மி.மீ, மாக்கினாம்பட்டியில் 10 மி.மீ, சின்னக்கல்லாறில் 4 மி.மீ என மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை இல்லை: கோவையில் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி, கோவையில் நேற்று (டிச.1) இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்று (டிச.2) காலையும் மழை தொடர்ந்ததால் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா அல்லது வழக்கம் போல் இயங்குமா என சந்தேகம் பெற்றோர் தரப்பில் ஏற்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று (டிச.2) பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.