சென்னை:
இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
இதனை முன்னிட்டு முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன்.
கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தைத் தொடர்பு கொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சு.முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்திற்கு ஆர்.ராஜேந்திரனையும் நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன்.
இம்மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் தொடர்ந்து பேசிக் கள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்.” எனப் பதிவிட்டுள்ளார்.
இன்று 13 மாவட்டங்களில் கனமழை.. வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. புதுச்சேரியின் பத்துக்கண்ணுவில் 45 செ.மீ. திருக்கனூரில் 43 செ.மீ. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 37 செ.மீ. நேமூரில் 35 செ.மீ. புதுச்சேரி பாகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 32 செ.மீ. செம்மேடில் 31 செ.மீ. வளவனூர், கோலியனூரில் 28 செ.மீ. விழுப்புரத்தில் 27 செ.மீ. செஞ்சி, கெடாரில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி அருகே நிலைகொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலவுகிறது.இதன் காரணமாக, இன்று (டிச.2) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.