உதகை:
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக உதகை, கோத்தகிரி, கூடலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட சில மாவட்டங்களில், ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக கன மழை பெய்தது. புயலின் எதிரொலியாக கடந்த இரண்டு நாட்களாக, நீலகிரி மாவட்டத்திலும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காலை நேரங்களில் கடும் மேகமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. உதகை, கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக இந்த மூன்று தாலுக்காகக்ளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கனமழை பெய்துள்ளதால் இன்று மற்றும் நாளை நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் இரவில் இருந்தே தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தினால் உதகை படகு இல்லம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ரயில் பாலத்திற்கு கீழ் தேங்கி இருந்த மழை நீரில் மாட்டிக் கொண்ட பிக்கப் வாகனம் சில மணி போராட்டத்திற்கு பின்பு இன்னொரு வாகனத்தின் உதவியுடன் வெளியில் இழுத்து வரப்பட்டது.
மாவட்டத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை, 11 டிகிரி செல்சியசாக இருப்பதால் கடும் குளிர் நிலவுகிறது. மேக மூட்டத்துக்கு இடையே சாரல் மழையும் பெய்து வருகிறது.
இதனால், உதகையில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.மேலும், உதகை உட்பட புறநகர் பகுதிகளில் மலை காய்கறி தோட்டம், தேயிலை தோட்ட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் சாரல் மழையுடன் கடும் குளிர் நிலவுவதால், பணிக்கு செல்லாமல் வீட்டில் முடங்கினர்.
மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு கவனமாக சென்றன. மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கூடலூரில் 73 மி.மீட்டர் மழை பதிவானது. மழையளவு:
உதகை 40.8 நடுவட்டம் 18, கிளன்மார்கள் 59, கல்வட்டி 19, மசினகுடி 16, குந்தா 8, எமரால்டு 14, கெத்தை 5, கிண்ணக்கொரை 8, அப்பர் பவானி 8, குன்னூர் 10, கேத்தி 32, கோத்தகிரி 27, கோடநாடு 71, கீழ் கோத்தகரி 33, தேவாலா 39, செறுமுள்ளி 30, பாடந்துறை 30, ஓவேலி 35, பந்தலூர் 19 என பதிவாகியுள்ளது.