மீண்டும் ஒருமுறை, தான் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

மீண்டும் ஒருமுறை, தான் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகத் திறனற்ற திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசு, சாத்தனூர் அணையில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருந்த போதே, தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக, 2.12.2024 அன்று அதிகாலை 2.30 மணியளவில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டபடியால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

இன்று தங்களது வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் நிற்கதியாக உள்ளனர். விழுப்புரம் நகரம் மற்றும் கடலூர் நகரங்களில், தென்பெண்ணையாற்றின் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு, எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாடு முழுவதும் எவ்வளவு மழை பெய்தாலும், அதை எதிர்கொண்டு மக்கள் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்வோம் என்று ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியிட்டார்கள்.

ஆனால், சென்னையைத் தவிர்த்து வேறு எந்த மாட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஒருமுறை, தான் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் என்பதை திரு.ஸ்டாலின் நிரூபித்துள்ளார். உடனடியாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்கவும்; மீட்பு நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபட்டு மக்களைக் காப்பாற்றவும், திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *