பொதுமக்களின் விரக்தி வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு: அண்ணாமலை!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தின் தற்போதைய நிலை இதுதான். சென்னையைத் தாண்டியுள்ள பிற மாவட்டங்களைக் கண்டுகொள்ளாமல், முதல்வரும், துணை முதல்வரும் மிக குறைவான மழை பெய்துள்ள சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர்.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை திமுக-வின் ஊடகப் பிரிவு போல நடந்துகொள்வதுடன், மழை வெள்ளத்தின் கடுமையான பாதிப்புகளையும், உண்மை நிலவரங்களையும் மறைத்து, மக்களை திசைதிருப்பி கோபாலபுரம் வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. இது அரசு அலட்சியத்தின் தெளிவான அறிகுறியாகும்.

இன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ள சம்பவம், பொதுமக்களின் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளது. திமுகவுக்கு விரைவில் என்ன நடக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு மென்மையான நினைவூட்டல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, பெஞ்சல் புயல் மற்றும், சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அரசூர், இருவேல்பட்டு ஆகிய கிராமங்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்புப் படையினர், மீட்டனர்.

இந்நிலையில், உடைமைகளை இழந்த இருவேல்பட்டு கிராம மக்கள் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் அமர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு எட்டப்படாததால், வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்திக்க சென்றனர்.

அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு மக்களில் சிலர் சேற்றை வாரி அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மீது இறைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *