பாபாசாஹெப் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை!!

புதுடெல்லி:
பாபாசாஹெப் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

1891ம் ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்த அம்பேத்கர் சட்ட மேதை, பொருளாதார நிபுணர், அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களைக் கொண்டிருந்தார். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராக விளங்கியவர். பட்டியல் சமூகத்தில் பிறந்தவரான அம்பேத்கர், புத்த மதத்தைத் தழுவினார். 1956ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் அம்பேத்கர் மறைந்தார்.

அவரது மறைவு தினம், பிறப்பு இறப்பு எனும் கர்மத்தில் இருந்து விடுபடுவதைக் குறிக்கும் வகையில் மஹாபரிநிர்வான் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மஹாபரிநிர்வான் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழே அவரது திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அம்பேத்கரின் படம் மற்றும் சிலைக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்று அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர். மேலும், சிலைக்கு அருகே மேடையில் அமர்ந்திருந்த புத்த துறவிகளிடமும் அவர்கள் ஆசி பெற்றனர்.

அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவிலும் மஹாபரிநிர்வான் தினம் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இதில், மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தில் அவரது திருவுருவச் சிலைக்கும் திருவுருவப் படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *