அமராவதி அணையில் இருந்து இன்று திறக்கப்பட்ட உபரிநீர்!!

உடுமலை:
அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி இதுவரை இல்லாத அளவாக விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையின் காரணமாக நள்ளிரவு முதல் உபரி நீர் ஆற்றிலும் பிரதான வாய்க்காலிலும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் ஏற்கெனவே அதன் முழு கொள்ளளவான 90 அடி நிரம்பியதை அடுத்து தொடர்ந்து அமராவதி அணையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று டிச.12 ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் அணைக்கு விநாடிக்கு 8,000 கன அடி நீர் வரத்து இருந்தது. உடனடியாக அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் அதிகாலை 1 மணியளவில் விநாடிக்கு 12,000 கன அடி, 1.30 மணியளவில் 25,000 கன அடி, காலை 6.30 மணியளவில் 26,000 கன அடி, காலை 7 மணியளவில் 30,000 கன அடி, 8 மணியளவில் விநாடிக்கு 36,000 கன அடி உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

அணையில் மொத்தம் 9 மதகுகள் உள்ளன.அதில் 2 மதகுகள் பழுத காரணமாக திறக்கப்படவில்லை. எஞ்சிய 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்ட உபரி நீர் ஆற்றை நோக்கி சீறிப் பாய்ந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக பருவ மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து இருந்து வருகிறது . கஜா புயலின் போது அணையில் இருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 30000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

அதன் பின்பு இன்று தான் அதிகபட்சமாக விநாடிக்கு 36000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அணையில் நீர் கொள்ளளவு கண்காணிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *