நெல்லை:
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்தது. இன்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுக்க 421 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஊத்து பகுதியில் 540 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த கனமழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கே டி சி நகர், கீழநத்தம், திருநெல்வேலி டவுன் பகுதிகளில் தாழ்வான பகுதி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
மேலும், கனமழை காரணமாக அனந்தபுரி – கன்னியாகுமரி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலிக்கு தாமதமாக வந்து சேர்கின்றது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு ஆணையர் தெரிவித்துள்ளார்.

கனமழை தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு: தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநதி, கடனாநதி பகுதிகள் மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணி அணைகளில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் காரணமாக தாமிரபரணி சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சுமார் 41,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அபாய கட்டத்தை எட்டவில்லை என்ற போதிலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பல்வேறு அரசு துறை அலுவலர்கள் அவ்வப்போது வழங்கிடும் எச்சரிக்கைகளை ஏற்று நடந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைத்திடவும் வீடுகளில் போதிய அளவு குடிநீர் மற்றும் அவசரகால பயன்பாட்டுப் பொருட்கள், தேவையான மருந்து மாத்திரைகள், இருப்பு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவும் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை கவனித்து செயல்படவும், தாழ்வான பகுதிகள் இருப்பவர்கள் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறைகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் முகாம்களுக்கு சென்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.