உகாண்டா:
மக்களினால் ‘டிங்கா டிங்கா’ என அழைக்கப்படும் இந்த மர்ம காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைத்தான் பாதிப்பதாக கூறப்படுகின்றது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பது கூட கடினமானதாக மாறியுள்ளது என்கின்றனர்.
உகாண்டா நாட்டில் புண்டிபுக்யோ மாவட்டத்தில் அடுத்தடுத்து பலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது வரை இந்த மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுவரையில் இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும் கூட எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன என நோய் பரவிய மாவட்டத்தின் சுகாதாரத் துறை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் ஒரு வார காலத்திற்குள் குணமடைந்து விடுவதாகவும்.
புண்டிபுக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் இந்த நோய் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் விரைவில் இந்த நோய் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் இதற்கு முன்னர் 1518ல் பிரான்ஸ் நாட்டில் டேன்சிங் ப்ளேக் எனப்படும் மர்மநோய் பரவியதாகவும், அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கட்டுப் பாடின்றி உயிரிழக்கும் அளவுக்கு தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்ததாகவும் அப்போதைய வரலாற்று குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இத்தகவலால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.