சென்னை:
அண்ணா பல்கலைக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட துயர சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை களும், ஆசிரியர்களுக்கு எதிரான தாக்குதல்களும் கல்வி நிலைய வளாகங்களில் நடந்தேறி வருவது மிகவும் வேதனைக்குரியது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை ஒழிக்க போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையிலும் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தமிழகத்தில் பரவலாக நடந்தேறி வருவது வேதனைக்குரியது.
அண்ணா பல்கலைக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த குற்றத்தில் ஈடுபட்டவர் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் ஏற்கனவே பாலியல் வழக்கு ஒன்று அவர் மீது உள்ளது என்றும் தகவல்கள் வருகின்றன.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு போதிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கத் தயங்கக்கூடாது.
அண்ணா பல்கலைக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை நீதித்துறையிடம் இருந்து பெற்றுத்தர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்து அவரை பாதுகாத்து தமிழக அரசு அவருக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.