தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – சீமான்!!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுவரை இல்லாத வகையில் மரபை மீறி ஆளுநர் நடந்து கொண்டிருக்கிறார். இது அநாகரிகமான அணுகுமுறை. இதற்கு ஆளுநர் கூறிய காரணம் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

சட்டமன்றத்தை விட்டு வெளியேறினால் போதாது, அவர் தமிழ்நாட்டை விட்டு போகட்டும். ஆளுநர் பதவி என்பது தேவை இல்லாத தொங்கு சதை, இங்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உண்டு, மக்கள் அதிகாரம் தான் தேவை.

நியமன உறுப்பினருக்கு இவ்வளவு அதிகாரம் எதற்கு? தேசிய கீதத்தை பாடாமலேயே விட்டுவிட்டால், அவர் குறை கூறலாம். ஆனால் அங்கு தேசியகீதம் பாடப்பட்டுள்ளது. அதுவும் உரிய மரபு படி இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் தாய் மொழியான தமிழ் தாய் வாழ்த்து பாடுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும். முதலில் என் தாய்க்கு தான் நான் மகன், அடுத்ததாக தான் அத்தைக்கு மருமகன் ஆக முடியும், அதற்கும் 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பல மாநிலங்களின் ஐக்கியம் தான் இந்தியா.

அதனால் ஒரு மாநிலத்தில் வாழ்த்துப்பாடல் பாடும் போது, அந்தந்த மொழிக்கான பாடல்களை பாடுவதற்கு தான் முன்னுரிமை. இங்கு நடந்தது போல் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த ஆளுநரால் இவ்வாறு நடந்து கொள்ள முடியுமா?, அவர்கள் துரத்தி அடித்து இருப்பார்கள்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இந்தியில் உறுதிமொழி எடுத்திருக்க முடியுமா? மராட்டியம் தவிர வேறு எந்த மொழியிலும் அங்கு உறுதிமொழி எடுத்துவிட முடியாது.

ஒரு சரியான ஆண் மகனாக இருந்தால் வேறு மாநிலத்துக்கு சென்று , ஆளுநர் இதை சொல்லி இருக்க முடியுமா? உலகிலேயே தொன்மையான மொழி, தமிழ் தான் என்று செல்லும் இடமெல்லாம் பிரதமர் மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த தமிழ் மொழிக்கு ஆளுநர் என்ன முன்னுரிமை செய்திருக்கிறார்? எனவே சட்டமன்றத்தில் மட்டுமல்ல, அவர் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *