சென்னை;
“என் கதையைத் திருடி `எந்திரன்’ திரைப்படத்தை எடுத்து, இயக்குநர் சங்கர் மோசடி செய்திருக்கிறார். இது காப்புரிமைச் சட்டப்படி கிரிமினல் குற்றம்” என்று 2011-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் மீது ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், ‘நாங்கள் கதையைத் திருடவில்லை. இந்த வழக்கு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது.
இந்த சிவில் வழக்கில், 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, “ஜூகிபா’ கதைக்கும் `எந்திரன்’ சினிமாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது என்பதால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஷங்கருக்கு எதிரான வழக்கைக் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் எந்திரன் திரைப்பட கதை காப்புரிமை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.