சென்னை:
ரமலான் நோன்பு நேற்று தொடங்கியதையொட்டி, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். ரமலான் நோன்பு தொடங்குவதற்கான பிறை பிப்.28-ம் தேதி (வெள்ளிக்கிழமை), சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
எனவே, மார்ச்.2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரமலான் நோன்பு தொடங்குகிறது என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நேற்று ரமலான் நோன்பு தொடங்கியது.
இதையொட்டி, இஸ்லாமியர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர். ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து, நேற்று தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
சென்னையில், திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல், பெரியமேடு பள்ளிவாசல், மண்ணடி ஈத்கா, ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணாசாலை தர்கா உட்பட பல்வேறு மசூதிகளில் ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று நடந்தது.
இதனிடையே, ரமலான் நோன்பு தொடங்கியதையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட செய்தியில், “சுய கட்டுப்பாட்டுடன், உடலை வருத்தி, மனரீதியாக இறைவனுடன் நெருக்கமாக உணர உதவும் ரமலான் நோன்புக்காலம், அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அளிப்பதாக அமையட்டும்” என்று கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.