விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக எம்எல்ஏ புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் மீது ஜூன் 24-ம் தேதி பரிசீலனை; மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசிநாள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவரும் , முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தேர்தல் – 2024 கழக வேட்பாளர் – வருகிற 10-07-2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தோழமைக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. அன்னியூர் சிவா (விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.