விநாயகர் சதுர்த்தி என்பது உருவத்திலிருந்து உருவமற்ற தன்மைக்கு நகர்வதைக் கொண்டாடும் விழா – சத்குருவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!!

விநாயகர் சதுர்த்தி என்பது உருவத்திலிருந்து உருவமற்ற தன்மைக்கு நகர்வதைக் கொண்டாடும் விழாவாக உள்ளது என சத்குரு தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

விநாயகர் ஞானத்திற்கான கடவுள், கல்வியும் அறிவும் அருள்பவர், தடைகளை நீக்குபவர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நம் தேசத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறோம்.

ஒவ்வொரு வருடமும் பருவமழை பொழிந்து முடித்து, கார்மேகங்கள் மறைய தொடங்கியவுடன், நாடெங்கும் உற்சாகமும் எதிர்பார்ப்பும் காற்றில் பரவ, லட்சக்கணக்கானவர்கள் அன்பிற்குரிய ஆனைமுகத்தானை கொண்டாட தயாராகிக் கொண்டிருப்பார்கள்.

இப்படி விழாக்கோலமும், பலகாரங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் கதை ஒன்று வெறும் புராணமாக இருந்துவிடாமல், புத்தி, படைப்பாற்றல் மற்றும் மாற்றத்திற்கான மகத்தான அறிகுறியாக திகழ்கிறது.

சமநிலையான புத்திசாலித்தனத்தின் வடிவமானவர் கணபதி. விக்னங்களை, அதாவது தடைகள் அனைத்தையும் தகர்ப்பவர் – அதனால் விக்னேஸ்வரன் என்று வணங்கப்படுகிறார்.

அப்படியென்றால், கஷ்டங்களை மாயமாக மறையச் செய்துவிடுவார் என்று அர்த்தம் அல்ல. அவர் கூறும் ஞானம் சூட்சுமமானது: அதாவது, நமக்குள் புத்திசாலித்தனம், சமநிலை, தெளிவு ஆகியவற்றை நாம் வளர்த்துக்கொள்ளும் போது, தடைகள் தாமாகவே கரைந்து போய்விடும்.

அவை இனி தடைகளாக இல்லாமல் படிக்கற்களாக மாறிவிடும். இங்கு புத்திசாலித் தனம் என்பது தந்திரமாக இருப்பதையோ, சாமர்த்தியமான கணக்குகளையோ குறிக்கவில்லை – இந்த பிரபஞ்சத்துடன் ஒத்திசைவில் இருப்பதையே குறிக்கிறது – உள்ளுக்குள் அமையும் சமநிலை காரணமாக நமக்குள்ளும், வெளிபுறத்திலும் வாழ்க்கையை சுகமாக கடக்க முடிகிறது.

இந்த புரிதலே விநாயகர் சதுர்த்தியின் ஐதீகமாக வெளிப்படுகிறது. பல நாட்களுக்கு பக்தர்கள் விநாயகர் சிலைகளை வடிப்பார்கள், ஆடல் பாடலுடன் அவரை ஆராதிப்பார்கள், அவருக்கு உணவு படைப்பார்கள், பக்திப் பரவசத்துடன் அவரை கொண்டாடுவார்கள்.

அதேசமயம், அந்த மூர்த்தியை நீரில் கரைப்பதுடன் விழா நிறைவு பெறும். சிலைகளை வடிப்பது – பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது. நீரில் அமிழ்த்துவது – சிவன் நிகழ்த்திய செயலான அழித்தலையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது.

இவை இரண்டும் சேர்ந்து ஒரே சுழற்சியை குறிக்கின்றன – உருவத்தைப் படைப்பது, அதன் மூலம் கற்றுக்கொள்வது, கடைசியில் அதை விடுவிப்பது.

விநாயகர் சதுர்த்தி மூலம் நாம் இதைத்தான் கற்றுக்கொள்கிறோம். அதாவது, உண்மையான புத்திசாலித்தனம் என்பது ஒருபோதும் இறுக்கமானது அல்ல, பற்றுகள் சார்ந்தது அல்ல.

அது நீர் போல இளகிய தன்மை கொண்டது, கட்டுகள் அற்றது – அதாவது, தொடர்ச்சியாக படைப்பிற்கு உள்ளாகி, அதன்பின் கரைந்துபோகும் உயிர்த்தன்மையை போன்றதே புத்திசாலித்தனமும்.

பிள்ளையார் வடிவத்தை உருவாக்கி அதன்பின் அதை நீரில் கரைக்கும் வழக்கம் ஒருவிதத்தில் இந்த பிரபஞ்சத்தின் அறுதியற்று மாறக்கூடிய இயல்பை குறிக்கிறது – சும்மா கண்மூடித்தனமாக உருவங்களை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த உருவத்தின் குணங்களை உள்வாங்கிக்கொண்டு, அவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறது.

மொத்தத்தில், விநாயகர் சதுர்த்தி என்பது உருவத்திலிருந்து உருவமற்ற தன்மைக்கு நகர்வதைக் கொண்டாடும் விழாவாக உள்ளது.


உண்மையான புத்திசாலித்தனம் என்பது அறிவை சேகரிப்பது அல்ல, சாமர்த்தியமாக இருப்பதும் அல்ல; இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றாக இசைந்து வாழும் திறனாகும் – எதிர்ப்பில்லாமல் மிதந்து வாழ்ந்து, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, நம் கட்டுப்பாடுகளை கடந்து விரிவடைவது ஆகும்.

இப்படியாக, இந்த கோலாகலமான பண்டிகையை கொண்டாடுங்கள், அழகு அழகான விநாயகர் சிலைகளின் கலைவண்ணத்தை கண்டுகளியுங்கள்.

கூடவே கணபதி என்பவர் உணர்த்தும் ஆழ்ந்த உட்பொருளை கருத்தில் கொள்ளுங்கள் – தடைகளை கரைந்துபோகச் செய்யும், ஒற்றுமையைக் கொண்டாடும், உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.


படைப்பின் சமநிலையை, எல்லையற்ற புத்திசாலித்தனத்தை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் உங்களுக்குள் உயிர்த்தெழச் செய்யட்டும்! வாழ்த்தும் ஆசியும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *