உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நெமிலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.
கோவிலில் இருந்து அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் மயானம் நோக்கி புறப்பட்ட போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்காளம்மன் மயானத்திற்கு சென்ற பின்னர் அங்கு ஆடு மற்றும் கோழி பலியிடப்பட்டது. பின்னர் படையல் இடப்பட்ட சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மயானத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான திருமணமான புதுமண பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் முட்டிப்போட்டு குழந்தை வரம் கேட்டு வழிபட்டனர்.
அவர்களுக்கு கோவில் பூசாரி எலுமிச்சை பழம் மற்றும் அங்காளம்மனுக்கு படையலிடப்பட்ட ரத்த சோறு ஆகியவற்றை வழங்கினார்.
இதே போல் கடந்த வருடங்களில் குழந்தை இல்லாமல் வேண்டிக் கொண்ட பெண்கள் குழந்தை பிறந்தவுடன் மயானத்திற்கு வந்து குழந்தை வரம் கொடுத்த அங்காளம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குழந்தையை சூறை விட்டு பின்னர் கோவில் பூசாரியிடம் காணிக்கை வழங்கி தங்களது குழந்தைகளை பெற்று சென்றனர்.
இதேபோல் சுடுகாட்டில் தங்களது முன்னோர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்த போது விரும்பி சாப்பிட்ட பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல், கிழங்கு உணவு பொருட்கள் மட்டுமின்றி குவாட்டர் பாட்டில்கள் , குளிர்பானங்கள், பீடி, சிகரெட் உள்ளிட்டவைகள் வைத்தும் குடும்பத்தோடு வழிப்பட்டனர்.
மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு விழாக் குழுவின் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.