“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” – சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் நடிகர் விஜய்!!

சென்னை:
“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” என சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளை நேற்றே தெரிவித்திருந்தனர். ஆனால் தவெக தலைவர் விஜய் நேற்று அக்கட்சியின் முதல் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் இன்று காலை தமிழக முதல்வர், அரசின் பெண்களுக்கான நலத்திட்டங்களை பட்டியலிட்டு மகளிர் தின வாழ்த்தை வீடியோவாக வெளியிட்ட சில மணி நேரங்களில் தவெக தலைவர் விஜய்யும் மகளிர் தின வாழ்த்து வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் விஜய், “எல்லோருக்கும் வணக்கம். இன்று மகளிர் தினம். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் எனது அம்மா, அக்கா, தங்கை, தோழியாகக் கருதுகிறேன்.

உங்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் சொல்லாமல் இருக்க முடியாது. அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே!?. பாதுகாப்பாக இருக்கும்போதுதானே சந்தோஷமாக இருக்க முடியும்.

அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது சந்தோஷம் இருக்காது தானே! அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய. நீங்கள், நான் எல்லோரும் சேர்ந்துதான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம்.

ஆனால் அவுங்க இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது. எல்லாமே இங்க மாறக்கூடியதுதானே. மாற்றத்துக்கு உரியதுதானே.

கவலைப்படாதீங்க. இந்த 2026-ம் ஆண்டு, நீங்க, நான் எல்லோரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்த்து உறுதியேற்போம்.

உங்களுடைய எல்லா சூழலிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக நான் உங்களோடு நிற்பேன். நன்றி, வணக்கம்.” என்று கூறியுள்ளார்.

‘வாழ்த்தில் தேர்தல் அரசியல்’ – தமிழக முதல்வரின் மகளிர் தின வாழ்த்து முழுவதும் அரசின் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டதாக அமைய, தவெக தலைவர் விஜய்யின் வாழ்த்து முழுவதும் ஆளும் திமுக அரசின் மீதான குற்றச்சாட்டாகவும், ஆட்சி மாற்றத்தைக் கோருவதாகவும் அமைந்துள்ளது. வாழ்த்தில் இருவரும் தேர்தல் அரசியலை முன்னெடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

2026 மே மாதம் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு இப்போதிருந்தே தமிழக தேர்தல் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்குகிறதோ எனத் தோன்றும் அளவுக்கு, அதிமுகவின் அரசியல் கூட்டணி நகர்வுகள், திமுகவின் இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை என தேசிய பிரச்சினைகளைத் தழுவிய அரசியல், தவெகவின் ‘மாற்றத்துக்கான அரசியல்’ என்ற சுய தம்பட்டங்கள் என அரசியல் களம் தேர்தல் பரபரப்புக்குள் நுழையத் தொடங்கியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *