சென்னை:
பாஜக-வுக்கு மெத்த பிடித்தமானவராக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தவறாமல் கலந்து கொண்ட நிகழ்வை தொட்டு தமிழக அரசியலில் ஏகப்பட்ட திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
அண்ணாமலைக்கும் அதிமுக-வுக்கும் இடையில் நடந்த வார்த்தை வீச்சுகளின் காரணமாக, 2024-ல் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது. மோடி, அமித் ஷா அழைத்துப் பேசிய பிறகும் கூட்டணி முறிவை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டார் இபிஎஸ்.
இந்த நிலையில் தான், மார்ச் 3-ம் தேதி கோவையில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி மகன் திருமணத்தில் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் வழக்கத்துக்கு மீறிய நெருக்கத்தைக் காட்டி குலைந்து பேசினார் அண்ணாமலை.
வேலுமணியும், இது அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டு திருமணமா பாஜக முன்னாள் அமைச்சர் வீட்டு திருமணமா என்று வியக்குமளவுக்கு பாஜக தலைவர்களின் கூட்டத்தையே கூட்டி இருந்தார். தேவையற்ற சங்கடங்களை தவிர்ப்பதற்காக இந்த விழாவில் இபிஎஸ் பங்கேற்கவில்லை. ஆனபோதும், அவரது மனைவியும் மகனும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை அதிமுக சீனியர்கள் சிலர், “ஆரம்பத்திலிருந்தே எஸ்.பி.வேலுமணி பாஜக கூட்டணி தேவை என்ற மனநிலையில் தான் இருக்கிறார். இப்போது அவரோடு செங்கோட்டையன், தங்கமணி ஆகியோரும் சேர்ந்துவிட்டார்கள். ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் தவிர முன்னாள் அமைச்சர்கள் பலரும் பாஜக தயவு தேவை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
இத்தனைக்குப் பிறகும் பாஜக-வை பழனிசாமி ஒதுக்கித் தள்ளினால் அதன் பிறகு வேலுமணி வகையறாக்களை வைத்து பாஜக புது ஆட்டத்தைத் தொடங்கலாம். இதையெல்லாம் தெரிந்துதான், “வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும்… எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான்” என்றெல்லாம் பழனிசாமி இறங்கி வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்” என்கிறார்கள்.
இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுசாமியிடம் கேட்டதற்கு, “எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண விழாவில் அண்ணாமலைக்கு எவ்வித முக்கியத்துவமும் தரப்படவில்லை. அண்ணாமலை வரும்போது மேடையில் சீர் நடந்து கொண்டிருந்தது.
அப்போது மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த எங்களை நோக்கி வந்து அனைவரையும் பார்த்து பேசினார். அவராகவே நேரில் வந்து சந்தித்துப் பேசிச் சென்றார். பதிலுக்கு நாங்களும் மரியாதை நிமித்தமாக அவரை வரவேற்றோம்.
மற்றபடி, நாங்கள் யாரும் அவரைச் சென்று சந்திக்கவில்லை. எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். தேர்தல் கூட்டணியானது வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகுகூட முடிவாகலாம். கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை நிர்வாகிகள், தொண்டர்கள் பின்பற்றுவார்கள்.
கொடிசியாவில் 10-ம் தேதி நடைபெறும் வேலுமணி வீட்டு திருமண வரவேற்பு விழாவில் பழனிசாமி கலந்து கொள்கிறார்.
பொதுச்செயலாளர், ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்பது சிறப்பா அல்லது 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்பது சிறப்பா என்பதை நீங்களே சொல்லுங்கள்” என்றார்.
இதனிடையே, உள்ளுக்குள் என்னென்னவோ திட்டங்கள் இருந்தாலும் பாஜக-வினர் நடத்திய மும்மொழிக் கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட முன்னாள் எம்எல்ஏ-வான விஜயகுமாரை கட்சியிலிருந்து கட்டம் கட்டி சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் பழனிசாமி!