14-ந்தேதி நடை திறப்பு: சபரிமலை கோவிலில் தரிசன முறையில் மாற்றம்; பங்குனி மாத பூஜை!!

திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

தொடர்ந்து 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும்.

மேலும் பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்தது. நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்.

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் சன்னிதானத்தில் பூஜை செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

1 முதல் 8 கிராம் அளவிலான தங்க டாலர்கள் ஏப்ரல் மாதம் விஷூ பண்டிகையையொட்டி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இதற்கான முன்பதிவு நிர்வாக அதிகாரி தலைமையில் நடைபெறும்.

மே மாதம் சர்வதேச ஐயப்ப சங்கமம் பம்பையில் 2 நாட்கள் நடைபெறும். இதில் 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஐயப்ப பக்தர்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உள்பட 1,250-க்கும் மேற்பட்ட கோவில்களில் வழிபாட்டு கட்டணங்களை 30 சதவீதம் உயர்த்த கேரள ஐகோா்ட்டு அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

2016-ம் ஆண்டுக்கு பின் வழிபாட்டு கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கோவில் விழாக்களில் அனைத்து நாட்களிலும் சாமி ஊர்வலத்திற்கு யானைகளை பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இதில் பள்ளிவேட்டை, ஆராட்டு உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் சாமி ஊர்வலத்திற்கு யானைகளை பயன்படுத்த தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது உறுப்பினர் அஜிகுமார் உடன் இருந்தார். சபரிமலையில், பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 1-ந்தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும். 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆராட்டு விழா தொடங்குகிறது. 11-ந்தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *